டொனால்ட் டிரம்பின் சமீபத்திய பிரசார நிகழ்வுகளில் அவருடன் லாரா லூமர் என்னும் வலதுசாரி சதி கோட்பாட்டாளர் பயணிப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குடியரசு கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சர்ச்சைக்குரிய லாரா லூமர், டிரம்ப் மீது செல்வாக்கு செலுத்தக் கூடுமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
லாரா லூமர் தனது முஸ்லிம் எதிர்ப்பு கருத்துகளுக்காக நன்கு அறியப்பட்டவர். மேலும் 9/11 என்னும் இரட்டை கோபுரம் மீதான தாக்குதல், அமெரிக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட “உள் வேலை” என்று கூறியவர். இதுபோன்ற சதி கோட்பாடுகளை பரப்பி பிரபலமானவர்.
கடந்த புதன்கிழமைன்று (செப் 11) நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பை நினைவுகூரும் ஒரு நிகழ்வில் டிரம்ப் கலந்து கொண்டார். அவருடன் லாரா லூமரும் கலந்து கொண்டார். இது அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது. சில அமெரிக்க ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டியது.
செவ்வாய்க்கிழமையன்று, அதிபர் தேர்தல் விவாதத்திற்காக சென்ற டிரம்புடன், 31 வயதான அவரும் பிலடெல்பியா சென்றார்.
ஹைத்தியில் (Caribbean country) இருந்து சட்டவிரோதமாக ஓஹாயோ என்னும் சிறிய நகரத்தில் புலம் பெயர்ந்தவர்களை குறிப்பிட்டு அதிபர் தேர்தல் விவாதத்தில் டிரம்ப் பேசியது சர்ச்சைக்குள்ளானது. வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை கொன்று அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்ற ஆதாரமற்ற கருத்தை டிரம்ப் கூறியது விவாதத்தின் மறக்கமுடியாத தருணமாக இருந்தது.
“புலம்பெயர்ந்த நபர்கள் அங்கு வசிக்கும் மக்களின் செல்லப்பிராணிகளை சாப்பிடுகிறார்கள்” என்று டிரம்ப் கூறினார்.
டிரம்ப் கூறியது போல் எதுவும் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என ஓஹாயோ நகர அதிகாரிகள் பிபிசி வெரிஃபையிடம் கூறினர். “அதுகுறித்து நம்பகமான அறிக்கைகள் எதுவும் இல்லை” என்று அவர்கள் கூறினர்.
டிரம்ப், தான் கூறும் கருத்துகள் தொலைக்காட்சியில் கேட்ட கூற்றுகளை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
அதேசமயம் இந்த விவாதத்திற்கு ஒரு நாள் முன்னதாக லாரா லூமர் இந்த கோட்பாட்டை தன் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டார். சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்தும் லாரா, தன் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து திங்கட்கிழமை பதிவிட்டார். அவரை சுமார் 12 லட்சம் பேர் சமூக ஊடகங்களில் பின்தொடர்கின்றனர்.