இரண்டு போட்டிகள் கொண்ட இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இலங்கை தற்போது 5வது இடத்தில் உள்ளது, நியூசிலாந்து 3வது இடத்தில் உள்ளது.
அதன்படி, உலக சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழையும் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் இவ்விரு போட்டிகளின் வெற்றி இரு அணிகளுக்கும் தீர்க்கமானதாக அமையும்.
காலியில் சுழல் பந்து வீச்சைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இலங்கை அணிக்கு பிரபாத் ஜயசூரியவுக்கு மேலதிகமாக ரமேஷ் மெண்டிஸ் அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இலங்கை அணியின் துடுப்பாட்டப் பட்டியலில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, அதன்படி தினேஷ் சந்திமால் மூன்றாம் நிலையிலும், கமிந்து மெண்டிஸ் ஐந்தாவது இடத்திலும் விளையாட உள்ளனர்.
விக்கெட் கீப்பிங் செய்யும் பொறுப்பில் இருக்கும் குசல் மெண்டிஸ் ஏழாவது இடத்தில் துடுப்பாடவுள்ளார்.
இதேவேளை, இந்தப் போட்டியின் நான்காவது நாளான எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு காரணமாக ஓய்வு நாளாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் தனித்துவமிக்க நிகழ்வாகும்.
டெஸ்ட் போட்டியை நாளை மறுநாள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, இதனால் இருபத்துமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டி ஓய்வு நாளுடன் நடத்தப்பட உள்ளது.