Thursday, January 2

அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. டிரம்பை கொலை செய்ய முயற்சித்ததாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 58-வயதான அந்த நபர் யார் என்பது பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வரும் நவம்பர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால், அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகிறார்கள்.

இதில் டொனால்டு டிரம்பிற்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கிறது. முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக பென்சில்வேனியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காதில் லேசான காயத்துடன் டிரம்ப் உயிர் தப்பினார்.

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் படையினர் சுட்டுக்கொன்றனர். உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளரான டிரம்ப் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சர்வதே அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், டிரம்பை மீண்டும் கொலை செய்ய முயற்சி நடைபெற்று இருக்கிறது.

புளோரிடாவில் உள்ள தனது வீட்டின் அருகே இருந்த கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த பகுதியைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக உஷாரான பாதுகாப்பு படையினர், துப்பாக்கி சூடு நடத்திய நபரை குறிவைத்து பதிலடி தாக்குதல் நடத்தினர். உடனடியாக அங்கிருந்த புதர் ஒன்றில் பதுங்கியிருந்த நபர் தனது உடமைகளை அங்கேயே போட்டுவிட்டு காரில் தப்பி ஓடினார்.

அவரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். அவர் பதுங்கியிருந்த புதர் பகுதியில் ஏகே 47 துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பு ‘படுகொலை முயற்சி’ வழக்காகப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. 58 வயதான ரயான் ரூத் வெஸ்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நார்த் கரோலினா கிரீன்ஸ் போரோவை சேர்ந்த ராயன் ரூத் கட்டுமான தொழிலாளியாக இருந்துள்ளார். அவருக்கு ராணுவத்தில் பணியாற்றிய பின்னணி எதுவும் கிடையாது. இருந்தாலும் ஆயுத சண்டையில் ஈடுபடும் என்ற ஆர்வத்துடன் இருந்து இருக்கிறார். குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையில் ஈடுபடும் ஆர்வத்துடன் இருந்தாராம்.

தனது எக்ஸ் பதிவில் உக்ரைனுக்காக சண்டையிட்டு உயிர் தியாகம் செய்ய தயராக இருக்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார். மேலும் சர்வதேச மோதல்களின் போக்கை மாற்ற வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அவரது வாட்ஸ் அப் பயோவில், மனித உரிமைகள், ஜனநாயகம், சுதந்திரத்திற்கு ஆதரவாக ஒவ்வொருவரும் சிறிய பங்கை செய்ய வேண்டும். சீனாவுக்கு நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக உதவ வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

வெறும் ஆன்லைனில் இப்படி பதிவிட்டது மட்டும் இன்றி கடந்த 2023 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், உக்ரைனுக்கு ஆதரவாக பயணிக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ரூத் வெஸ்லி ஏற்கனவே, துப்பாக்கியுடன் ஒரு கட்டிடத்திற்கு புகுந்து அனைவரையும் தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 2022-ல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ரூத்தின் செயல் தீவிர குற்றச்சாட்டுக்களின் கீழ் வரும் என்றாலும், இந்த வழக்கின் விவரம் தெரியவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version