Thursday, November 21

இலங்கையில் சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற 550 பேருக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பொன்று கிட்டியிருக்கும் நிலையில், அதற்கான ஆட்சேர்ப்பானது, வெளிப்படைத்தன்மையின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. 

ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் முயற்சிகளையடுத்து, இலங்கையின் சுகாதாரத்துறையில் உள்ள 550 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற 250 தாதியர்கள், 100 இரசாயன பரிசோதகர்கள், 200 தாதிய உதவியாளர்கள் ஆகியோருக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

03.01.2023 திகதியிடப்பட்ட கடித பரிமாற்றங்களுக்கமைய, அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான மேற்படி பணியிடங்கள் பற்றிய விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

ஆனால், குறித்த கடித பரிமாற்றத்தின் பின்னர்,  அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குறித்த பணியிடங்களுக்கு தெரிவுசெய்யப்படுவதற்காக பின்பற்றப்பட்ட முறைமை, தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர் விபரக்கோவை உள்ளிட்ட எந்த விதமான தகவல்களும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

கட்டுரையாளரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய, சுகாதார அமைச்சில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயம் சம்பந்தமாக தகவல்களை வழங்க மறுத்துவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் பிறிதொரு அதிகாரம் மிக்கவர்களை நோக்கி விரல் நீட்டிச் செல்லும் நிலைமையே நீடித்தது.

Share.
Leave A Reply

Exit mobile version