சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவிற்குள் ஊடுருவி அதன் உள்புற இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த யுக்ரேனை அனுமதிப்பது குறித்து சர் கியர் ஸ்டார்மர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
யுக்ரேன் விஷயத்தில் ஒரு உத்தியில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமாக கலந்துரையாடியதாக சர் கியர் ஸ்டாமர் கூறினார்.
“இரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இரானில் தயாரிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தி யுக்ரேன் முழுவதும் இரவோடு இரவாக ரஷ்யா தாக்கியது என்றும், தனது நாட்டு மக்களை பாதுகாக்க யுக்ரேனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் தேவை என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அன்று தெரிவித்தார்.
“இதற்காக நாங்கள் அனைத்து நட்பு நாடுகளுடனும் ஆலோசித்து வருகிறோம்”, என்று அவர் கூறியிருந்தார்.
வெள்ளை மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பாக, ரஷ்யா மீது யுக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்க அனுமதிக்க வேண்டாம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இத்தகைய நடவடிக்கைகள் ரஷ்யா – யுக்ரேன் போரில் நேட்டோ நாடுகளின் “நேரடி பங்கேற்பை” குறிக்கும் விதமாக இருக்கும் என்று புதின் கூறினார்.
“புதினின் அச்சுறுத்தல்களை மீறி ரஷ்யாவில் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்க யுக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் அனுமதி அளிக்க வேண்டும். வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டும் நடத்துவது ரஷ்ய அதிபருக்கு நன்மை பயப்பதாக இருக்கின்றது” என்று பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சர் பென் வாலஸ் பிபிசி ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியில் கூறினார்.
“இது மற்றொரு விஷயம் சார்ந்த இன்னொரு இழுபறியாக இருப்பதால் நான் ஏமாற்றமடைகிறேன்”, என்று மேலும் அவர் தெரிவித்தார். சர் பென் வாலஸ், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஆவார்.
மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளை தடுக்கவே புதின் இவ்வாறு எச்சரிக்கை விடுப்பதாக யுக்ரேன் பேச்சுவார்த்தைகளுக்கான முன்னாள் அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி கர்ட் வோல்கர் கூறினார்.
“இதுகுறித்து நாங்கள் நடவடிக்கை எடுப்பதை தடுக்கவே புதின் இவ்வாறு கருத்து தெரிவித்து வருகிறார். அவர் உண்மையில் என்ன செய்யப் போகிறார் அல்லது என்ன செய்ய நினைக்கிறார் என்பது இதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை”, என்று அவர் டுடே நிகழ்ச்சியில் கூறினார்.
வெள்ளை மாளிகையில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமரை சந்திப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “விளாதிமிர் புதினைப் பற்றி நான் அதிகம் நினைப்பதில்லை”, என்று கூறினார்.
ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்க அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் இன்று வரை யுக்ரேனுக்கு அனுமதி வழங்கவில்லை.
ஆனால், ரஷ்யா- யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி இதுதான் என்றும், இதற்காக இந்த ஏவுகணைகளை பயன்படுத்த யுக்ரேனுக்கு அனுமதி வழங்குமாறும் மேற்கத்திய நட்பு நாடுகளிடம் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.